Friday, October 10, 2008

102 முறை வாசித்த பதிவு

102முறை வாசித்த பதிவு
நான் இந்த பதிவை 102முறையேனும் வாசித்திருப்பேன்., இன்னமும் ஆர்வம் குறையவில்லை, சலிக்க வில்லை:

எழுத்துக்களிலேயே உணர்வுகளை நாம் உணரலாம். அந்த பதிவரின் பதிவை அப்படியே காப்பி செய்து பதித்துள்ளேன். இதை சொல்வதில் எந்த வித தயக்கமும் வெக்கமும் இல்லை:

"புத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. "எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.
அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.
"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"
என்று சொல்லப்பட்டிருந்தது அதில்! அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.
அதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..
இத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...
என் இனிய ஜி3!

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறாள்!!
கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள்! அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன? என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்."
http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post.html

2 comments:

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

அழுக்கறத் தினம் குளித்தும்

அழுக்கறாத மாந்தரே

அழுக்கிருந்தது அவ்விடம் ?

அழுக்கு இல்லாதது எவ்விடம் ?

அழுக்கிருந்த அவ்விடத்தில்

அழுக்கறுக்க வல்லீரேல்

அழுக்கில்லாத சோதியோடு
அணுகி வாழலாகுமே!''---------சிவவாக்கியார்

superlinks said...

hai visit my blog